பசிபிக் கடலில் தோன்றிய மிதக்கும் ‘தீவு’


கடலில் உள்ள தீவுகள் மிதந்து செல்வதில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் பசிபிக் கடலில் கோடானு கோடி கற்கள் அடை போல மிக நெருக்கமாக மிதந்து செல்லக் காணப்பட்டன.வானிலிருந்து பார்த்தால் இவை மிதக்கும் தீவுகள் போன்று காட்சி அளித்தன.

தென்பசிபிக் கடலில் நியூலாந்துக்குக் கிழக்கே சுமார் 1000 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மிதக்கும் கற்கள் காணப்பட்டன. இவற்றின் பரப்பு 26 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் அளவுக்கு இருந்தது. இது பெல்ஜியம் நாட்டின் நிலப்பரப்புக்குச் சமம்.

கடலில் மிதக்கும் கற்களைக் கண்டதும் நியூசிலாந்து கடற்படைக் கப்பல் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டது. எனினும் இக்கற்களால் கப்பல்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இப்போது கடலில் தோன்றிய மிதக்கும் கற்களை
 வானிலிருந்து எடுத்த படம்
நீரில் ஒரு கல்லைப் போட்டால் குபுக் என்று நீருக்கும் மூழ்கி விடும். ஆனால் மிதக்கும் கற்கள் உண்டு. இவை Pumice Stonces  என்று அழைக்கப்படுகின்றன. இவற்றை நுரைக் கற்கள் என்று கூறலாம். இவை எரிமலையினால் தோற்றுவிக்கப்படுபவை .காற்றுக் குமிழ்கள் நிறைய அடங்கிய நெருப்புக் குழம்பு உருண்டைகள் வடிவில்  மிக வேகமாக உயரே தூக்கி எறியப்பட்டு நீரில் வந்து விழும் போது இந்த நுரைக் கற்கள் உண்டாகின்றன.
2006 ஆம் ஆண்டில் கடலில் மிதக்கும் கற்கள் காணப்பட்ட போது
பிரெடெரிக் என்ற ஆஸ்திரேலியர் எடுத்த படம்
நுரைக் கல் ஒன்றை அதே  பரிமாணமுள்ள சாதாரணக் கல்லுடன் ஒப்பிட்டால் நுரைக் கல்லின் அடர்த்தி குறைவு. நுரைக் கல் ஒன்றை உற்றுக் கவனித்தால் அதில் எண்ணற்ற சிறிய துளைகள் காணப்படும். நெருப்புக் குழம்பு உருண்டையாக இருந்த கட்டத்தில் இதனுள் காற்றுக் குமிழ்கள் இருந்தன என்பதை இவை காட்டுகின்றன அடர்த்தி குறைவு என்பதால் இவை நீரில் மிதக்கும்.
சற்றே பெரிய நுரைக் கல். இதில் நிறைய துளைகள் இருப்பதைக் கவனிக்கவும்
தென் பசிபிக் கடலுக்கு அடியே இருக்கக்கூடிய  எரிமலையின் சீற்றத்தின் விளைவாக இவை தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது பசிபிக் கடலுக்கு  அடியில் எரிமலைகள் நிறையவே உள்ளன. நுரைக் கற்கள் எந்த எரிமலையிலிருந்து வெளிப்பட்டிருக்கலாம் என்பது திட்டவட்டமாகத் தெரியவில்லை. ஒரு வேளை நியூசிலாந்துக்கு அருகே உள்ள மோனாவாய் என்ற எரிமலையிலிருந்து    வெளிப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
கடலுக்குள் அமைந்த மோனாவாய் எரிமலை
 மோனாவாய்  எரிமலையின் உச்சியானது  கடல் மட்டத்திலிருந்து சுமார் 130 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.கடந்த காலத்தில் இது விரிவாகவே ஆராயப்பட்டுள்ளது சில ஆண்டுகளுக்கு முன்னர் பசிபிக்கில் இவ்விதம் கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளில் ஒன்று நிறைய நெருப்பைக் கக்கியபடி கடல் நீருக்கு மேலே தலையை நீட்டியது.வேறு விதமாகச் சொன்னால் நடுக்கடலில் புதிதாக ஒரு தீவு முளைத்தது.

மிதக்கும் நுரைக் கற்கள் கடலில் மிதந்தபடி  எங்காவது கரையில் ஒதுங்கும். சுமார் 129 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசிய எரிமலை ஒன்றினால் உண்டான நுரைக் கற்கள் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கரையில் போய் ஒதுங்கின.

தீவு போல மிதக்கும் நுரைக் கற்கள் மூலம் ஒரு தீவிலிருந்து வேறு தீவுக்கு தாவரங்களும் விலங்குகளும் பரவியிருக்கலாம் என்று சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடலில் மிதக்கும் நுரைக் கற்கள் 
நுரைக் கற்களுக்குப் பல உபயோகங்கள் உள்ளன.பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரோமானியர்   இவற்றைப் பயன்படுத்தி கட்டடங்களைக் கட்டினர். இவற்றைப் பொடி செய்தும் பயன்படுத்துவது உண்டு. சிறு கட்டிகளாக உருக்கொடுத்து கடைகளில் விற்கின்றனர். குளிக்கும் போது குதிகால், உள்ளங்கால் ஆகியவற்றில் படிந்திருக்கும் அழுக்கை அகற்ற  நுரைக் கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. 


0 comments: