பூமியைப் பயமுறுத்தும் சூரியன்

பூமியைப் பயமுறுத்தும் சூரியன்

Share Subscribe
undefined
 சூரியனிலிருந்து வெளிப்படும் ஆற்றல் முகில் பூமியின் காந்த மண்டலத்தைத் தாக்குவதை இப்படம் விளக்குகிறது. நீல நிறக் கோடுகளுக்கு நடுவே சிறிய வெள்ளை நிறப் புள்ளியாகத் தெரிவது தான் பூமி. வரைபடம்:Courtesy NASA
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சூரியன் சீறுகிறது. சூரியனில் பெரிய கரும்புள்ளித் தொகுப்பு உருவானதைத் தொடர்ந்து சீற்றங்கள் தோன்றியுள்ளன. இப்போதைக்கு இவை கடுமையாக இல்லை. சூரிய சீற்றத்துடன் சில சமயம் ஆபத்தான ஆற்றல் முகில் தோன்றி பூமியை நோக்கி வரும். வருகிற நாட்களில் அப்படியான தாக்குதல் ஏற்படுமா என விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள்.
சூரியனில் தோன்றும் கரும்புள்ளிகளுக்கு விஞ்ஞானிகள் நம்பர் கொடுப்பது உண்டு. இப்போது பெரியதாகத் தோன்றியுள்ள கரும்புள்ளித் தொகுப்பின் நம்பர் AR 1339. இத்தொகுப்பில் பல டஜன் கரும்புள்ளிகள் உள்ளன. இவற்றில் மிகப் பெரிய புள்ளியில் 17 பூமிகளைப் போட்டு அடைக்கலாம்.
இந்த கரும்புள்ளித் தொகுப்பிலிருந்து சில நாட்களுக்கு முன் சீற்றங்கள் (Solar Flares) அடுத்தடுத்துக் கிளம்பின. சூரியனில் ஏற்படும் சீற்றங்கள் அவற்றின் கடுமையைப் பொருத்து வகைப்படுத்தப்படுகின்றன். இப்போது ஏற்பட்ட சீற்றம் M1  வகையைச் சேர்ந்தது. அதாவது அவ்வளவு கடுமை அல்ல என்று பொருள். X வகைச் சீற்றம் கடுமையானது.

சூரியனில் சீற்றம் ஏற்படுகின்ற இடத்திலிருந்து காமா கதிர்கள், எக்ஸ் கதிர்கள் போன்ற ஆபத்தான கதிர்கள் வெளிப்படும். சூரிய சீற்றம் என்பது பல நூறு அணுகுண்டுகள் வெடிப்பதற்குச் சமம். இவ்விதம் நிகழும் போது தோன்றும் ஆற்றல் மிக்க துகள்கள் எட்டே நிமிஷத்தில் பூமியின் காற்று மண்டலத்தை வந்து தாக்கும்.

  நவம்பர் முதல் வாரத்தில் காணப்பட்ட
AR 1339 கரும்புள்ளித் தொகுப்பு
கடுமையைப் பொருத்து காற்று மண்டலம் விரிவடையும். பூரி உப்புவதைப் போல காற்று மண்டலம் பெருக்கும். பூமியை 400 அல்லது 500 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுகின்ற செயற்கைக்கோள்களையும் தாண்டி விரியும். இதனால் செயற்கைக்கோள்களின் வேகம் குறையலாம். வேகம் குறைந்தால் நிலை குலைந்து பூமியில் வந்து விழுகின்ற நிலை ஏற்பட்டு விடும். செப்டம்பரில் அமெரிக்க செயற்கைக்கோள் ஒன்றும், அக்டோபரில் ஜெர்மன் செயற்கைக்கோள் ஒன்றும் ‘அகால மரணமடைந்து’ பூமியில் வந்து விழுந்ததற்கு இதுவே காரணம். 1979 ஆம் ஆண்டில் அமெரிக்க ஸ்கைலாப் விண்கலத்துக்கும் இதே கதி ஏற்பட்டது.

வட துருவ அதிசய ஒளி
மிக உயரத்தில் பறக்கின்ற செயற்கைகோளில் உள்ள மின்னணு உறுப்புகள் சேதமடைவதற்கு வாய்ப்பு உள்ளது. 1993 ஆம் ஆண்டில் டெல்ஸ்டார் 401 செயற்கைக்கோள் இவ்விதம் பாதிக்கப்பட்டது. மேலும் பல செயற்கைக்கோள்கள் கடந்த காலத்தில் இவ்விதம் பாதிக்கப்பட்டுள்ளன.

சூரியனில் சீற்றம் ஏற்படும் போது சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வெளிப்படுவது உண்டு. இது Coronal Mass Ejection, சுருக்கமாக CME, என்று சொல்லப்படுகிறது . இந்த ஆற்றல் முகில் பூமியின் மேற்பரப்பை வந்தடையாமல் பூமியின் காந்தமண்டலம் தடுக்கிறது. ஆற்றல் முகில் புவிகாந்தமண்டலத் தாக்கி அதை சீர்குலைக்கிறது. இதன் விளைவாக  மின்சப்ளைத் தொகுப்பு (Grid) கடுமையாகப் பாதிக்கப்படலாம். ஒரு சமயம் இதனால் கனடாவின் பெரும் பகுதியில் மின்சப்ளை துண்டிக்கப்பட்டு பல லட்சம் மக்கள் நாள் கணக்கில் இருளில் மூழ்கினர்.

சூரியனின் சீற்றம்
டிவி ஒளிபரப்பு, கப்பல்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு,  வயர்லஸ் தொடர்பு, செல்போன் சேவை முதலியவையும் பாதிக்கப்படலாம். தரைக்கு அடியில் புதைக்கப்பட்ட எண்ணெய் சப்ளைக் குழாய்கள், எரிவாயு சப்ளைக் குழாய்கள் ஆகியவையும் பாதிக்கப்படலாம்.

சூரியனும் தனது அச்சில் சுழல்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. ஆகவே ஆற்றல் முகில் சூரியனிலிருந்து கிளம்பி மிகுந்த வேகத்தில் வரும் போது பூமி அதன் பாதையில் இருக்க நேரிட்டால் பூமியில் பகலாக உள்ள பகுதிகளை அது பாதிக்கும். அண்மையில் இப்படிக் கிளம்பிய ஆற்றல் முகில் வேறு திசையில் சென்று விட்டதால் பூமியை அது தாக்கவில்லை
சூரியக் காற்று அளவு மானி
இப்பொது 350 ஆக உள்ளது

சூரியனில் ஏற்படுகின்ற கிளர்வுகளைத் தொடர்ந்து கவனித்து பூமிக்குத் தகவல அனுப்புவதற்கென்றே பல ஆளற்ற விண்கலங்கள் செயல்பட்டு வருகின்றன. சூரியனிலிருந்து ஆற்றல் முகில் வந்து சேருவதற்கு முன்னரே இந்த விண்கலங்கள் முன்கூட்டித் தகவல் அனுப்பி விடுகின்றன. முடிந்த வரை சில தற்காப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ள இது உதவுகிறது.

சூரியனிலிருந்து Solar Wind எனப்படும் துகள் வீச்சு எல்லாக் காலத்திலும் எல்லாப் புறங்களிலும் பரவிக் கொண்டிருக்கிறது. சூரியனில் கரும்புள்ளிகள் தோன்றும் காலத்தில் இது சற்று கடுமையாக இருக்கலாம். இப்போது இது 350 ஆக உள்ளது (படம் காண்க). குறிப்பாக வட துருவப் பகுதியில் வானில் அரோரா பொரியாலிஸ் எனப்படும் அதிசய ஒளிக்கு இத்துகள்களே காரணம். சூரியனில் கரும்புள்ளிகள் அதிகமாக உள்ள காலத்தில் வட துருவ ஒளி சிறப்பாகத் தெரியும்.

 

.‘
செவ்வாய் கிரகம் பற்றிய தொடரின் மற்ற பதிவுகள்:


0 comments: